விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.8 லட்சம் செலவில் வைப்பாற்றில் கருவேலம் மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்றன. இசுனைத் தொடர்ந்து, சுத்தம் செய்யப்பட்ட வைப்பாற்றுப் பகுதியைப் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) மாநிலப் பொருளாளர் கவிஞர் திலகபாமா நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, ஆற்றின் இரு கரைகளிலும் மரக்கன்றுகளை நடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கவிஞர் திலகபாமா, சாத்தூர் வைப்பாற்றை முறையாகப் பராமரிக்காத நகராட்சி நிர்வாகத்தின் மீதும், தமிழகம் முழுவதும் குப்பை மேலாண்மையைச் சரியாகச் செயல்படுத்தாத நகராட்சிகள் மீதும் பாமக சார்பில் சட்டப்பூர்வ வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்தார். மேலும், குப்பை மேலாண்மையை முறையாகக் கையாண்டு குப்பைகளைக் கொட்டாமல், கழிவுநீரை ஆற்றுக்குள் விடுவது ஆபத்தான போக்கு எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் செண்பகவல்லி கால்வாய் வழியாக மூன்று மாவட்டங்களுக்குச் செல்வதைச் சுட்டிக்காட்டியதுடன், அக்கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பைத் தமிழக அரசு உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சமூக வலைதளங்களில் பரவும் காணொளிகள் மற்றும் ஒலிக் கோப்புகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் அவற்றை எவர் வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்பதால், அவற்றை உடனடியாக நம்புவதில்லை என்றார். இடைத்தேர்தல் தொடர்பான சத்யபாமாவின் பணப் பகிர்வு விவகாரம் குறித்த கேள்விக்கு, உறுதிப்படுத்தப்படாத தகவல்களுக்குப் பதிலளிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
மேலும், ஆளுங்கட்சி மீதான விமர்சனங்கள் மக்கள் நலனுக்காக இருந்தால் அது ஆரோக்கியமானது என்றும், வெறும் தனிநபர் வசைப்பாடல்களாக இருந்தால் அதில் உடன்படப் போவதில்லை என்றும் குறிப்பிட்ட அவர், பாமகவைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியின் நல்ல பணிகளைப் பாராட்டுவதாகவும், தவறுகளைச் சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.

