திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தி, மனிதநேய ஜனநாயக கட்சியினர் தலையில் மற்றும் கைகளில் கட்டுப் போட்டவாறு மாநகராட்சி அலுவலகத்தில் நூதன முறையில் மனு அளித்தனர். திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பிரதான சாலைகள், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் இதர பணிகளுக்காக தோண்டப்பட்டன. ஆனால், பணிகள் நிறைவடைந்த பின்னரும் சாலைகள் முறையாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன.
குறிப்பாக, மாநகராட்சியின் 5-வது வார்டுக்கு உட்பட்ட பாளையங்கோட்டை மண்டலம் 60 அடி சாலை நீண்ட காலமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குண்டும் குழியுமான சாலைகளால் தினசரி விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் காயமடையும் சூழல் நிலவுகிறது.
மேலும், லேசான மழை பெய்தாலே இந்தச் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனைக் கண்டித்தும், சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும், மனிதநேய ஜனநாயக கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அப்போது, சாலைகளால் ஏற்படும் விபத்துகளை அதிகாரிகளுக்கு உணர்த்தும் வகையில், தங்களது தலை மற்றும் கைகளில் கட்டு போட்டபடி நூதன முறையில் வந்து மனுவை வழங்கினர்.
இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகி பிலால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநகராட்சிப் பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்தச் சாலைகளைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாகச் சீரமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

