சென்னையில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre - GCC) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் நிறுவனம், இந்தியாவில் தனது தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சென்னையில் இந்த மையத்தை அமைக்க உள்ளது. சென்னை மையத்தின் மூலம் சுமார் 800 தொழில்நுட்பம் சார்ந்த உயர்மதிப்பு வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம், டிஜிட்டல் செயல்பாடுகள் உள்ளிட்ட துறைகளில் திறன் வாய்ந்த பணியாளர்களை கொண்டு செயல்படும் வகையில் இந்த உலகளாவிய திறன் மையம் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் வணிக செயல்பாடுகளுக்கு சென்னையிலிருந்து ஆதரவு வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து சர்வதேச நிறுவனங்கள் தங்களது உலகளாவிய திறன் மையங்களை அமைத்து வரும் நிலையில், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பும் சென்னையின் GCC துறை வளர்ச்சியில் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த Walgreens நிறுவனமும் சென்னையில் தனது முதல் இந்திய GCC-யை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது.
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சென்னை மையம் மூலம் உருவாக உள்ள வேலைவாய்ப்புகள், குறிப்பாக தொழில்நுட்பத் திறன் கொண்ட இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

