விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘தமிழ் வாழ்க’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ள பதாகை சேதமடைந்து, உடைந்து விழும் நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள பதாகை கீழே விழுந்தால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பதாகையின் தற்போதைய நிலையை அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அதனை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பழைய பதாகையை அகற்றிய பின்னர், அதே இடத்தில் புதிய ‘தமிழ் வாழ்க’ பதாகையை அமைத்து புதுப்பிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பே உரிய நடவடிக்கை எடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

