இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். வரலாறு, கட்டிடக்கலை, ஆன்மிகம் மற்றும் பல்வேறு தனித்துவமான வழிபாட்டு முறைகளைக் கொண்ட இக்கோவில், மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது.
மரகதவல்லி என அழைக்கப்படும் மீனாட்சி அம்மன்
மீனாட்சி அம்மன் சிலை சுத்த மரகதக் கல்லால் ஆனதாகக் கூறப்படுவதால், அம்மன் ‘மரகதவல்லி’ என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நடராஜர் சன்னிதிக்கும் தனிச்சிறப்பு உள்ளது. பொதுவாக நடராஜர் இடது காலை தூக்கி நடனமாடும் நிலையில் காணப்படுவார். ஆனால் மதுரையில் மட்டும் வலது காலை தூக்கி நடனமாடும் கோலத்தில் காட்சியளிக்கிறார்.
அம்மனுக்குச் சொந்தமான விலைமதிப்புமிக்க நகைகள்
மீனாட்சி அம்மனுக்கு ஏராளமான சிறப்பு ஆபரணங்கள் உள்ளன. சுமார் 400 காரட் எடையுள்ள வைரக் கிரீடம், சுமார் 6 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட தங்கக் கவசம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் குறிப்பிடத்தக்கவை.
மேலும், பாண்டியர், நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களுடன் தொடர்புடைய நகைகளும் அம்மனுக்கு சொந்தமானதாக கூறப்படுகிறது.
பீட்டர் பாதுகம்
1812 முதல் 1828-ம் ஆண்டு வரை மதுரை கலெக்டராக இருந்த ரவுஸ் பீட்டர், மீனாட்சி அம்மன் சிறுமி வடிவில் வந்து தனது உயிரைக் காப்பாற்றியதாக நம்பினார். இதற்கு நன்றிக்கடனாக அம்மனுக்கு தங்கக் காலணிகளை வழங்கியதாக கோவில் வரலாற்றில் கூறப்படுகிறது.
அந்த காலணிகளில் ‘பீட்டர்’ என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த காலணிகள் ‘பீட்டர் பாதுகம்’ என்று அழைக்கப்படுகின்றன. சித்திரை திருவிழா காலத்தில் அவை அம்மனின் பாதங்களில் அணிவிக்கப்படுகின்றன.
ஆண்டுக்கு 3 நாட்கள் மட்டுமே தங்கப் புடவை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை, தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி ஆகிய 3 நாட்களில் மட்டும் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்கப் புடவை அணிவிக்கப்படும் சிறப்பு வழக்கம் உள்ளது.
தீபாவளி நாளில் காலை மற்றும் மாலை நேரங்களில் தங்கப் புடவையுடன் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். அதேபோல், சொக்கநாதருக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்படும்.
1700-ம் ஆண்டு முதல் ஒலிக்கும் நகரா முரசு
மீனாட்சி அம்மன் கோவிலில் கி.பி. 1700-ம் ஆண்டு முதல் ‘நகரா முரசு’ ஒலித்து வருவதாக கூறப்படுகிறது. கோவிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே உள்ள நகரா மண்டபத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த முரசு இசைக்கப்படுகிறது.
கோவில் நடை திறக்கப்படுவதை அறிவிக்கும் வகையில் இந்த மரபு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வரலாறு, ஆன்மிகம், கலை மற்றும் பாரம்பரியத்தின் பல்வேறு சிறப்புகளை ஒருங்கே கொண்டதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திகழ்கிறது.

