அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏழைகளின் திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கப்படும் இக்கோயிலுக்கு, அரியலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தஞ்சாவூர், சேலம், ஆத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கும்பகோணம், கள்ளக்குறிச்சி, திட்டக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 'கோவிந்தா, கோவிந்தா' என்ற பக்தி கோஷங்களுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மூலவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
பக்தர்களின் வசதிக்காக அரியலூரில் இருந்து கல்லங்குறிச்சி கோயிலுக்குச் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்களின் சார்பில் குடிநீர் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

