தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 170 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (அக்டோபர் 6) கடைசி நாளாகும்.
இப்பணியிடங்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையிலான ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 31 வகையான பதவிகளுக்கு 170 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
என்னென்ன பணியிடங்கள்?
உதவி மேலாளர், கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர், உதவி செயலாளர், ஆங்கில செய்தியாளர், தமிழ் செய்தியாளர், கணக்கு அலுவலர், துணை மேலாளர், ஆராய்ச்சி உதவியாளர், மூத்த பூச்சியியல் வல்லுநர், மாவட்ட நூலக அலுவலர், மூத்த அலுவலர் (தொழில்நுட்பம்), நகர மற்றும் ஊரமைப்பு உதவி இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.
கல்வித்தகுதி
பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். பி.இ., பி.டெக்., ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவப் பட்டம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ். உள்ளிட்ட பல்வேறு கல்வித்தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மேலும், முதுகலை கால்நடை மருத்துவம், நூலக அறிவியல் அல்லது நூலகம் மற்றும் தகவல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றவர்களும் குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், பயன்பாட்டு பொருளாதாரம், வணிக பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கும் சில பணியிடங்கள் உள்ளன.
இன்று கடைசி நாள்
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று (அக்டோபர் 6) ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், காலக்கெடு முடிவதற்குள் டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

