தமிழகம் முழுவதும் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் வகையில், ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் விஜய், பேருந்தில் பயணம் செய்த பெண் பயணிகளுக்கு இலவச பயண டிக்கெட்டுகளை நேரில் வழங்கினார்.
தற்போது நகர மற்றும் மாநகரப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியின்படி இத்திட்டம் ‘வெற்றிப்பயணம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பயனடைய வருமான உச்சவரம்பு மற்றும் பயண எண்ணிக்கைக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருநங்கைகளும் இத்திட்டத்தின் கீழ் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
புதிய விரிவாக்கத்தின் மூலம் மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேல் இயக்கப்படும் மலைப்பகுதி சாதாரண பேருந்துகளும் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.
மொத்தம் 12,695 அரசு பேருந்துகள் இந்தத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என அரசு கணித்துள்ளது.
‘வெற்றிப்பயணம்’ திட்டத்திற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி செலவாகும் என அரசு மதிப்பிட்டுள்ளது.

