சென்னையில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வந்த சந்தோஷ் குமார் (30), மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புக்குச் சென்ற நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த கண்ணையா என்பவரின் மகனான சந்தோஷ் குமார், சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஈரோட்டைச் சேர்ந்த விஜி என்பவருடன் திருமணமாகி அகிலவன் (5) என்ற மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையில் பணியில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சந்தோஷ் குமாரின் மார்பில் கம்பி குத்தியுள்ளது. இதனால் கடந்த 30ஆம் தேதியன்று மருத்துவ விடுப்பு பெற்று அவர் தனது சொந்த ஊரான வத்திராயிருப்புக்கு வந்துள்ளார்.
இதற்கிடையே, வீட்டிலிருந்து வெளியே சென்ற சந்தோஷ் குமார், வத்திராயிருப்பு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தண்ணீர் தொட்டிக்கு அருகில் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வத்திராயிருப்பு காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வத்திராயிருப்பு காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

