நெல்லை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சங்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் இரண்டாவது நாளாக இன்று காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சிஐடியு சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய கோரிக்கைகள்:
- தூய்மைப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- 2017 ஆம் ஆண்டு அரசாணையின்படி தினசரி சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
- தொழிலாளர்களின் இபிஎப் (EPF) நிதியான ரூ.4½ கோடியை உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
- தேர்தல் வாக்குறுதியின்படி தூய்மைப் பணியாளர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டும்.
தங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அறிவித்துள்ளனர். இந்தத் தொடர் போராட்டம் காரணமாக நெல்லை மாநகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

