சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டத்தின் கீழ் பூந்தமல்லி–வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை வரும் அக்டோபர் 11-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் தமிழக முதல்வர் விஜய்யும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விழாவைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும் முதல்வர் விஜய்யும் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் இணைந்து பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14.6 கி.மீ. மெட்ரோ வழித்தடம்
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டத்தில் 3 வழித்தடங்களில் மொத்தம் சுமார் 118 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 4-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள பூந்தமல்லி–வடபழனி வழித்தடம் 14.6 கி.மீ. நீளம் கொண்டது.
இந்த வழித்தடத்தில் பயணிகள் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு அனுமதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 11-ம் தேதி சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி, மெட்ரோ ரயில் தொடக்க விழா மற்றும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

