அரியலூர் நகராட்சியில் கல்லூரி மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, அரசு கலைக் கல்லூரி சாலை வழியாக பேருந்து சேவைக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் இரயில்வே நிலையம் செல்லும் சாலைகளில் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்துவதாலும், ஆக்கிரமிப்புகளாலும் பேருந்துகள் இயக்கப்படுவதில் சிரமங்கள் ஏற்படுவதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கடந்த 25.07.2026 அன்று அந்த வழியாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் நேரில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் அடிப்படையில், சாலையின் இருபுறமும் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 01.10.2026 அன்று பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் மாணவ சமூக நீதி விடுதிகளை ஆய்வு செய்தபோது, மாணவ-மாணவிகள் இச்சாலை வழியாக பேருந்து இயக்க கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்களின் கல்வி நலன் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், கல்லூரி சாலை வழியாக பேருந்துகளை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பேருந்து சேவையால் மாணவர்களும் பொதுமக்களும் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

