கனடாவில் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவக்குமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் என இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகம், இருவரின் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட தேவையான தூதரக உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
விமானப் பயிற்சியின்போது இந்த விபத்து நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து ஏற்பட்ட இடம் மற்றும் அதற்கான காரணம் தொடர்பான முழுமையான விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
இதனிடையே, கனடா ஊடகங்கள் சஸ்காட்சுவான் மாகாணத்தின் கிஸ்பே (Kisbey) அருகே Cessna 172 ரக சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்துள்ளன. அந்த விமானத்தில் இருந்த இருவரும் உயிரிழந்ததாகவும், அவர்கள் வணிக விமானி உரிமத்துக்கான பறக்கும் நேரத்தைப் பெறுவதற்காக விமானத்தை வாடகைக்கு எடுத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், கிஸ்பே அருகே நடந்த இந்த Cessna 172 விபத்துதான் தமிழக மற்றும் புதுச்சேரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவமா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. விபத்து தொடர்பாக கனடா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் அவர்களது குடும்பங்களுக்கு இந்திய துணைத் தூதரகம் உதவி செய்ய உள்ளது.

