திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.868 கோடி முதலீட்டில் பெப்சிகோ நிறுவனத்தின் புதிய உணவுப் பொருள் தயாரிப்பு ஆலைக்கான பூமிபூஜை விழா இன்று நடைபெற்று, அதற்கான பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
மணப்பாறை சிப்காட்டில் ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், மேலும் பல முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. அந்த வகையில், பெப்சிகோ நிறுவனம் சார்பில் ரூ.868 கோடி செலவில் பிரம்மாண்ட உணவுப் பொருள் தயாரிப்பு ஆலை அமைக்கப்படவுள்ளது.
மொத்தம் 28 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த ஆலை, எதிர்வரும் 2028ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் தனது முழுமையான உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஆலையின் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த 650 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூமிபூஜை நிகழ்வில் சிப்காட் உயரதிகாரிகள் மற்றும் பெப்சிகோ நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பெப்சிகோ இந்தியாவின் தெற்காசிய தலைமைச் செயல் அதிகாரி ஜாக்ருத் கோடேச்சா, நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.









