திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆமணக்கம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியை தாக்கியதாகக் கூறப்படும் புகாரில் பிளஸ்-2 மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆமணக்கம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவர், இன்று காலை நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தின்போது தவறு செய்ததாகக் கூறப்படுகிறது. வழிபாட்டுக் கூட்டம் நிறைவடைந்ததும், பள்ளியின் தலைமை ஆசிரியை மகேஸ்வரி அந்த மாணவியை அழைத்து கண்டித்ததுடன், தாக்கியதாகவும் தெரிகிறது. இந்தத் தாக்குதலில் மாணவியின் இடது கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணப்பாறை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவியைச் சந்தித்த தலைமை ஆசிரியை மகேஸ்வரி, அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.









