இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
சும்பாவா தீவுப் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் கடைகள் குலுங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பலர் பாதுகாப்பு கருதி வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளிக்கு சென்றனர்.
சுனாமி எச்சரிக்கை இல்லை
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும், இந்தோனேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் முகமை சார்பில் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த நிலநடுக்கத்துக்கு பின்னர் அடுத்தடுத்த அதிர்வுகள் பதிவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்க செயல்பாடுகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

