கேரளாவைச் சேர்ந்த 19 வயது சட்ட மாணவியும் மாடலுமான கஸியா லிஸ் மெஜோ, ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ பட்டத்தை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற பிரமாண்ட இறுதிப்போட்டியில் 52 போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி அவர் இந்தப் பட்டத்தை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்ற முதல் கேரளப் பெண் என்ற பெருமையையும் கஸியா பெற்றுள்ளார். மாவேலிக்கரையைச் சேர்ந்த இவர், அபுதாபியில் வளர்ந்தவர். தற்போது சட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சட்ட மாணவி முதல் அழகிப் போட்டி வரை
கஸியாவுக்கு அழகிப் போட்டி உலகம் புதிதல்ல. 2024-ம் ஆண்டு மிஸ் டீன் திவா பட்டத்தை வென்ற அவர், 2025-ம் ஆண்டு ‘மிஸ் டீன் இன்டர்நேஷனல்’ போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று முதல் ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தார். 2026-ம் ஆண்டு ‘மிஸ் யுனிவர்ஸ் கேரளா’ பட்டத்தையும் வென்றிருந்தார்.
மாடலிங் மட்டுமின்றி கஸியா பாரம்பரிய நடனத்திலும் ஆர்வம் கொண்டவர். மேலும், மலையாளத் திரைப்படமான ‘ஷைலாக்’ மூலம் நடிப்புத் துறையிலும் அறிமுகமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுள்ள கஸியா, வரும் நவம்பர் மாதம் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற உள்ள 75-வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார்.
இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷ்ணவி கணேஷ் முதல் ரன்னர்-அப் ஆகவும், குஜராத்தைச் சேர்ந்த அனுஷ்ரீ சத்வலேகர் இரண்டாவது ரன்னர்-அப் ஆகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

