கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குளித்தலை மற்றும் தோகைமலை, நங்கவரம், லாலாபேட்டை, மாயனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், இன்று இப்பகுதியில் திடீரெனப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையின் காரணமாகச் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், அலுவலகப் பணியாளர்களும் கடுமையான அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே, தொடர் வெயிலால் வறண்டு கிடந்த பூமி இந்த மழையால் குளிர்ச்சியடைந்திருப்பதோடு, குளிர்ந்த சீதோசன நிலையும் நிலவி வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.









