வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய இறக்குமதி வரிகளுக்கு (Tariffs) எதிராக 25 அமெரிக்க மாநிலங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்தியா உள்ளிட்ட சுமார் 60 வர்த்தக கூட்டாளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% முதல் 12.5% வரை புதிய வரி விதிக்கப்பட்டதை சட்டவிரோதமானது என்று மனுவில் சவால் விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவில், இந்த வரிகள் அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில் பெரும்பகுதியை பாதிக்கும் என்றும், அதிபரின் அதிகார வரம்பை மீறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய வரிகள், முன்பு நீதிமன்றத்தால் செல்லாது எனக் கூறப்பட்ட பரவலான வரிகளை மாற்று சட்ட அடிப்படையில் மீண்டும் அமல்படுத்தும் முயற்சி என்றும் மாநிலங்கள் வாதிட்டுள்ளன.
டிரம்ப் நிர்வாகம் தரப்பில், கட்டாயத் தொழிலாளர் உழைப்பில் (Forced Labour) தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தவும், அமெரிக்க வர்த்தக நலன்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த காரணம் வெறும் முன்னெச்சரிக்கையாக மட்டுமே பயன்படுத்தப்படுவதாக வழக்கு தொடர்ந்துள்ள மாநிலங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்த வழக்கு அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. தீர்ப்பு வெளிவரும் வரை, புதிய வரிகள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்து உலக வர்த்தக வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

