செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் தெருவில் கடந்த மூன்று மாதங்களாகப் பழுதடைந்த நிலையில் காணப்படும் சிறு மின்விசை நீா்த்தேக்கத் தொட்டியை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் மற்றும் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில்களுக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இக்குடிநீா்த் தொட்டி மூலம், அப்பகுதி குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் மற்றும் கோயிலுக்கு நாள்தோறும் வருகை தரும் ஏராளமான பக்தர்கள் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில், இந்தச் சிறு மின்விசை நீா்த்தேக்கத் தொட்டி பழுதாகி மூன்று மாதங்கள் கடந்தும், நகராட்சி நிா்வாகம் அதனைச் சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.
குடிநீர் தொட்டி தொடர்ந்து முடங்கியுள்ளதால், அப்பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, கோயிலுக்கு வரும் பக்தர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பழுதடைந்த மின்விசை நீா்த்தேக்கத் தொட்டியை விரைந்து சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









