உலக அமைதி தினத்தை முன்னிட்டு, அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் இந்தியா சார்பில் “மூன்றாம் உலகப் போரைத் தடுப்போம்” (STOP WORLD WAR 3) என்ற தலைப்பில் நாடு முழுவதும் அமைதி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போரினால் ஏற்படும் பேரழிவுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், ஆயுத மோதல்களுக்கு மாற்றாக அன்பு, சகோதரத்துவம், நீதி மற்றும் பேச்சுவார்த்தை மூலம் உலக அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம் என அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் தெரிவித்துள்ளது.
தற்போது பல்வேறு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றம் மற்றும் பகைமை காரணமாக, உலக அளவில் போர் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் போர் ஏற்பட்டால் மனிதகுலம் மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என அதன் உலகத் தலைவர் ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரம் மற்றும் ஆயுத பலத்தின் மூலம் நீடித்த அமைதியை ஏற்படுத்த முடியாது என்றும், நீதி, சகிப்புத்தன்மை, பரஸ்பர மரியாதை மற்றும் பேச்சுவார்த்தை ஆகியவற்றின் அடிப்படையிலேயே நிலையான அமைதியை உருவாக்க முடியும் என்றும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மேலும், போர்களால் அப்பாவி பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத், “அனைவரிடமும் அன்பு, யாரிடமும் வெறுப்பில்லை” என்ற கொள்கையின் அடிப்படையில் மனிதநேயத்தைப் பாதுகாக்கவும், உலகை அழிவிலிருந்து காக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில் தலைவர் முகமது ரஃபி, வெளிவிவகாரச் செயலாளர் ஜே.சுலைமான், துணைத் தலைவர் அப்துல் ரவூப் மௌலவி, ஜியா உல் ஹக், ஏ.எம்.ஜாகிர் ஹுசைன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

