விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளதால் சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிளவக்கல் பெரியாறு அணை 47 அடி முழு கொள்ளளவு கொண்டது. விருதுநகர் மாவட்டத்தின் முக்கியமான அணைகளில் ஒன்றாக கருதப்படும் இந்த அணையின் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 50 கண்மாய்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது.
வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலையில் இருந்து வந்தனர். குறிப்பாக பாசனத்திற்கான நீர் கிடைப்பது தொடர்பாக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 17 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து தற்போது 20 அடியாக உள்ளது.
மேலும் அணைக்கு வினாடிக்கு 15 கன அடி வீதம் தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

