அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக படிக்கட்டுகள், யானைப்பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் ரோப்கார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இதில் ரோப்கார் சேவைக்கு ஆண்டுதோறும் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில் செப்டம்பர் 2-ஆம் தேதியும், பின்னர் செப்டம்பர் 12-ஆம் தேதியும் சேவை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பராமரிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் குறிப்பிட்ட தேதிகளில் சேவை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும் திருக்கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஜூலை 20-ஆம் தேதி முதல் கணக்கிட்டால் 64 நாட்களுக்குப் பிறகு இந்த சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
புதிய ஷாப்ட் பொருத்தம்
பராமரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக ரோப்கார் இயக்கத்துடன் தொடர்புடைய இயந்திரங்கள் அனைத்தும் நவீன என்.டி.டி. (NDT) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் முடிவுகளின் அடிப்படையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து புதிய ஷாப்ட் வாங்கப்பட்டு பொருத்தப்பட்டது.
மேலும், கியர் பாக்ஸ் உள்ளிட்ட இயந்திரப் பகுதிகளிலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் புதிய பெட்டிகள் பொருத்தப்பட்டு, அவற்றில் மணல் மூட்டைகளை ஏற்றி தொடர்ச்சியான சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கீழ்நிலையத்திலும் பராமரிப்புப் பணிகள்
ரோப்கார் கீழ்நிலையத்தில் இயந்திரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் புதிய மேற்கூரை அமைத்தல், ஃபால் சீலிங் பொருத்துதல், பக்கவாட்டுச் சுவர்களில் கிரானைட் பதித்தல் உள்ளிட்ட சிவில் பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து வல்லுநர் குழுவினர் ரோப்கார் அமைப்பை விரிவாக ஆய்வு செய்து தகுதிச் சான்று வழங்கியுள்ளனர். இதன் அடிப்படையில், செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் ரோப்கார் சேவை முழுமையாக இயக்கத் தயாராக இருப்பதாக திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் நிம்மதி
ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டிருந்த கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலான காலத்தில், குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் மின் இழுவை ரயில் சேவையைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இதனால் வின்ச் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், 64 நாட்களுக்குப் பிறகு ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளதால், மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பயணச் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வருவது பக்தர்களிடையே நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

