விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ராக்காச்சி அம்மன் கோவில் நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் ராக்காச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள நீர்வீழ்ச்சியில் கடந்த சில மாதங்களாக மழையின்மை மற்றும் கடும் வறட்சி காரணமாக நீர்வரத்து இன்றி தண்ணீர் வறண்டு காணப்பட்டது.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ராக்காச்சி அம்மன் கோவில் நீர்வீழ்ச்சியில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராக்காச்சி அம்மன் கோவில் நீர்வீழ்ச்சி பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு குறைந்து, நிலைமை பாதுகாப்பானதாக மாறும் வரை பொதுமக்கள் நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

