விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் சில பேருந்துகள் புறவழியாக செல்வதாக பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வத்தின் கவனத்திற்கு சென்றதைத் தொடர்ந்து, அவர் சம்பவம் தொடர்பாக நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக, கள்ளிக்குடியில் இருந்து விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்கு எஸ்.பி. செல்வம் நேரடியாக பேருந்தில் பயணம் செய்தார். இதற்காக பயணச்சீட்டையும் பெற்றுக்கொண்டார். அப்போது பேருந்து நடத்துநரிடம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்குமா என அவர் கேட்டுள்ளார்.
அதற்கு பேருந்து நடத்துநர், விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நின்று செல்லும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பயணிகளிடம் நிலவி வந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் முறையாக நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை முறையாக நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்வதாக சம்பந்தப்பட்ட பேருந்து நிர்வாகத்தினர் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் சிரமம் தொடர்பாக புகார் எழுந்த நிலையில், நேரடியாக பேருந்தில் பயணம் செய்து நிலைமையை ஆய்வு செய்த எஸ்.பி. செல்வத்தின் நடவடிக்கை குறித்து பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

