நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் கடந்த 2 மாதங்களாகவே வட மாநிலங்களில் இருந்து கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் தமிழ் நாட்டுக்குள் வருவதை தடுக்கும் விதமாக வட மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் ரெயில்களை குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வரும் ரெயில்களை ஆங்காங்கே சோதனை செய்து வருகின்றனர்.
அதன் பயனாக ஒவ்வொரு நாள் சோதனையின் போதும் கிலோ கணக்கில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று அதிகாலை சென்னையில் இருந்து குருவாயூர் நோக்கி வந்த தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாஞ்சி மணியாச்சி பகுதியில் ரெயில்வே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கடைகளில் கடைசி பகுதியில் உள்ள பொது பெட்டியில் சோதனை செய்த போது கேட்பாரற்று கிடந்த ஒரு பையில் சுமார் 10 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர். இதேபோல் மேற்குவங்கம் மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரை வாரத்துக்கு 2 நாட்கள் இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை மதுரை மற்றும் விருதுநகர் ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தபோது ரெயில்வே போலீசார் அதிரடி சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த ரெயிலில் எஞ்ஜின் அருகே உள்ள பொதுப்பட்டியில் இருந்த ஒரு பையை சோதனை செய்த போது 6 கிலோ கஞ்சா இருந்தது.
அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட 16 கிலோ கஞ்சாவையும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புருலியாவில் இருந்து புறப்படும் ரெயிலானது மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களை கடந்து 4-வது மாநிலமாக தமிழ்நாட்டுக்குள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

