அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் வீட்டுப்பாதை தொடர்பான பிரச்சினையில் ராஜா என்பவர் நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் இரு நுழைவு வாயில்களிலும் திரண்டதால், இரண்டு வாயில்களும் மூடப்பட்டன. இதனால் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் சிரமம் ஏற்பட்டது. சிலர் சுவர் ஏறி குதித்து வெளியேறினர்.
அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.
இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தால் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

