திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணாபுரம் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயில் 16-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஐந்து அடுக்கு ராஜகோபுரம், 3 பிரகாரங்களுடன் சுமார் 1.8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில், சிற்பக் கலை மற்றும் கட்டிடக்கலைக்கு சிறப்புமிக்கதாக விளங்குகிறது.
மூலவர் ஸ்ரீ வெங்கடாசலபதி நான்கு கரங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசராக காட்சியளிக்கிறார். மூன்றாம் பிரகாரத்தில் ஸ்ரீ அலர்மேல்மங்கை தாயாருக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ், வைகானச ஆகம முறைப்படி தென்கலை சம்பிரதாயத்தில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவிற்கான கால்நாட்டு நிகழ்ச்சி கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு அங்குரார்ப்பணம் மற்றும் சேனை முதலியார் புறப்பாடு நடைபெற்றது.
திருவோண நட்சத்திரமான நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் காலைசந்தி பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அர்த்த மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீ சீனிவாசர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து கருடக்கொடி, சக்கரத்தாழ்வாருடன் சீவிலியில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது. பின்னர் கொடிப்பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், வேத மந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து கொடிமரம், பலிபீடம் மற்றும் கொடிமர காவல் தெய்வமான குத்துப்பிறை இசக்கி அம்மனுக்கு மாப்பொடி, மஞ்சள், வாசனைப்பொடி, பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் நவகும்ப கலச நீரால் திருமஞ்சனம் நடைபெற்றது. கொடிமரத்திற்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நிறைவாக சுவாமிக்கும் கொடிமரத்திற்கும் கோபுர ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி மற்றும் கும்ப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
11 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீ சீனிவாசர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வீதி உலா வருகிறார். வரும் 27-ஆம் தேதி கருட வாகன புறப்பாடும், 2-ஆம் தேதி திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளன.
விழாவிற்கான ஏற்பாடுகளை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இணை ஆணையர், நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

