திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ரோப்கார் சேவை, 64 நாட்களுக்கு பிறகு மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
பழனி மலைக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரயில் மற்றும் ரோப்கார் ஆகிய வசதிகளை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ரோப்கார் சேவையில் தினசரி, மாதாந்திரம் மற்றும் ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக ஜார்கண்டில் இருந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய கம்பிவடம் வரவழைக்கப்பட்டு ரோப்காரில் பொருத்தப்பட்டது. மேலும், மேல் தளத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பில் சாப்டுகள் மாற்றப்பட்டன.
ரோப்கார் பெட்டிகளில் தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அவற்றுக்கு புதிதாக வர்ணமும் பூசப்பட்டது. இதனுடன் ரோப்கார் வளாகத்தில் புதிய டைல்ஸ் கற்கள் பதித்தல், பால் சீலிங், வண்ண விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாடு மற்றும் அழகுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, முதற்கட்டமாக எடை கற்கள் வைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர் ஐஐடி நிபுணர் குழுவினர் ரோப்கார் சேவையை ஆய்வு செய்து தரச்சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து, சேவையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து 64 நாட்களுக்கு பிறகு ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கோவில் அதிகாரிகள், உபயதாரர்கள் மற்றும் கோவில் இணை ஆணையர் பொறுப்பு வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோப்கார் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், பழனி மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

