அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
பக்தர்கள் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் குடமுழுக்கு மண்டபம் வழியாக ஒருவழிப்பாதை ஏற்படுத்தப்பட்டு, பக்தர்கள் மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, கோயிலின் ரோப்கார் சேவை வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் ரோப்கார் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும் ரோப்கார் சேவை இயங்காததால், மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வின்ச் எனப்படும் மின் இழுவை ரயில் சேவையை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் வின்ச் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து மின் இழுவை ரயில்களில் பயணம் செய்தனர்.
மேலும், சாமி தரிசனத்திற்கான வரிசையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அதேபோல், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள காவல்துறையினரும் பணியில் ஈடுபட்டனர்.

