புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவில் ஆடிப்பூரத் திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார்.
108 வைணவத் திருத்தலங்களில் மிக முக்கியப் பிரார்த்தனைத் தலமாக விளங்கக்கூடிய ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் திருக்கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான ஆடிப்பூரப் பெருவிழா ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இத்திருவிழாவின் சிகர நிகழ்வான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆடிப்பூரத் திருத்தேரோட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் விழாவில் பெரும் திரளாகப் பங்கேற்கும் வகையில் அன்றைய தினம் விருதுநகர் மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, ஆகஸ்ட் மாதத்தின் 5-வது சனிக்கிழமையான 29.08.2026 அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலைநாளாகச் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

