விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலம், செண்டை மேளம் முழங்க, ஆட்டம்–பாட்டத்துடன் உற்சாகமாக நடைபெற்றது. தொடர்ந்து மழை பெய்தபோதிலும் பக்தர்கள் குடைகளை பிடித்தபடி திரண்டு நின்று விநாயகர் சிலைகளை வழிபட்டனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகாசி நகரின் பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கணபதி ஹோமத்துடன் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு தினமும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, ஆன்மிக பஜனைகள், சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 20-ம் தேதி இரவு விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. மாரியம்மன் கோவில் வெற்றி விநாயகர் ஆலயம் முன்பிருந்து பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் தொடங்கியது.
வண்ணமயமான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள், செண்டை மேளம், பேண்ட் வாத்தியம் மற்றும் மேளதாளங்களுடன் நகரின் முக்கிய சாலைகள் மற்றும் ரத வீதிகள் வழியாக சென்றன. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ஆட்டம்–பாட்டத்துடன் உற்சாகமாக சென்றனர். விநாயகர் சிலைகளுக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் பூமழை தூவி வரவேற்பு அளித்தனர்.
ஊர்வலத்தின்போது தொடர்ந்து மழை பெய்தபோதிலும் பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்தபடி சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று விநாயகரை வழிபட்டனர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற ஊர்வலம் நகரின் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று ஜக்கம்மாள் கோவில் பின்புறம் நிறைவடைந்தது. பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர்நிலைத் தொட்டியில் விநாயகர் சிலைகள் முறையாக கரைக்கப்பட்டன.
மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றதால் சிவகாசி நகரில் விநாயகர் ஊர்வலம் உற்சாகமாக நடைபெற்றது.

