நெல்லை மாநகர பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. பாதுகாப்பு பணிக்காக மாநகரம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதியில் இந்து முன்னணி சார்பில் 100 விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொடர்ந்து சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், வழிபாடு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இன்று 20-ம் தேதி மாலை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. நெல்லை டவுன் தேரடி திடலில் இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையேற்றார்.
அதேபோல் பாளையங்கோட்டை, தச்சநல்லூர் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. மேளதாளம் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குளத்தில் கரைக்கப்பட்டன. தீயணைப்புத்துறை வீரர்களின் உதவியுடன் சிலைகள் பாதுகாப்பாக கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதியில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கிய சாலைகள் மற்றும் ஊர்வலப் பாதைகளில் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

