நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சற்குண விநாயகர் திருக்கோயிலை, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோயில் நிர்வாகிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோபாலசமுத்திரம் சற்குண விநாயகர் கோயிலை அறநிலையத்துறை தன் நிர்வாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது தொடர்பாக, ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் தெரிவிக்குமாறு அறநிலையத் துறை சார்பில் கோயில் சுவரில் சமீபத்தில் அறிவிப்புக் கடிதம் ஒட்டப்பட்டது. இதற்கு பல ஆண்டுகளாக கோயிலை நிர்வகித்து வரும் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, கோயில் நிர்வாகிகளில் ஒருவரான சுப்பிரமணியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நிர்வாகிகள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“நாங்கள் நீண்ட காலமாக இக்கோயிலை முறைப்படி பராமரித்து வருகிறோம். அதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஏற்கனவே இந்து சமய அறநிலையத் துறை மற்றும் காவல் துறையிடம் சமர்ப்பித்துள்ளோம். இச்சூழலில், தனிநபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோயில் நிர்வாகம் குறித்து எந்தவொரு அவசர முடிவும் எடுக்கக் கூடாது.
கடந்த 8-ஆம் தேதி கோயில் சுவரில் அறிவிப்பு ஒட்டப்பட்ட நிலையில், இடையே ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வந்ததால், ஆட்சேபனைகள் மற்றும் ஆவணங்களை முறையாகத் தொகுத்து சமர்ப்பிக்க போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை. மேலும், கோயிலில் சட்ட ஒழுங்குப் பிரச்னையோ, வழிபாட்டிற்குத் தடையோ அல்லது அவசர நிர்வாகச் சூழலோ இல்லாத நிலையில், அரசு அவசரகதியில் தலையிடுவது அவசியமற்றது.
எனவே, சற்குண விநாயகர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும்” என்று அம் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

