விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவை திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்காக இன்று அனுப்பி வைக்கப்பட்டன.
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவையின்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை பெருமாளுக்கு சாற்றப்படுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு கருட சேவை செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை மோகினி அலங்காரத்திலும், மாலை கருட வாகன சேவையிலும் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம் உள்ளிட்டவை கோயில் ஸ்தானிகர் கிச்சப்பன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டன. பின்னர் அவை கோயில் பிரகாரத்தை சுற்றி கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு முறையில் காரில் வைத்து திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருப்பதி சென்றடையும் இந்த மாலை உள்ளிட்ட பொருட்களுக்கு அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் கருட சேவை நாளில் பெருமாளுக்கு சாற்றப்படும். இந்த பாரம்பரியம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மற்றும் திருப்பதி ஏழுமலையான் வழிபாட்டு மரபுகளுக்கு இடையேயான ஆன்மிகத் தொடர்பை வெளிப்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

