தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற விவாதத்தால் அவையில் சிறிது நேரம் கலகலப்பு ஏற்பட்டது.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்றபோது, தி.மு.க. முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, ஆளும் தரப்பினர் நிம்மதியாக இருப்பதாகவும், தாங்கள் டென்ஷனில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், அரசு பொறுப்பில் இருப்பவர்களுக்கு சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றை உடனடியாக கவனிக்க வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்தார்.
அவர் பேசுகையில், சிறிய அளவிலான வாய்க்கால் பிரச்சினை குறித்து கூட முதல்-அமைச்சர் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமை சரியாகிவிட்டதா என கேட்டறிவதாக கூறினார். கடந்த காலங்களில் எதிர்க்கட்சியினர் 5 ஆண்டுகள் டென்ஷனில் இருந்ததாகவும், தற்போது தாங்கள் தினமும் டென்ஷனில் இருப்பதாகவும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் எப்போதும் “பிசி ஆனந்த்” ஆக இருப்பதாக நகைச்சுவையாக குறிப்பிட்டார். மேலும், பல்வேறு கட்சித் தொண்டர்கள் அவரை சந்தித்து வருவதாகவும் அவர் கூறினார்.
புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள இயக்கத்திற்கு ஆட்சியை நடத்துவதில் உள்ள சிரமங்கள் இனிமேல்தான் தெரியவரும் என்றும், பேசுவது எளிது; ஆனால் அதனை நடைமுறைப்படுத்தும்போதுதான் சவால்கள் புரியும் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இரு தரப்பினரின் இந்தப் பேச்சால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சிரிப்பும் கலகலப்பும் ஏற்பட்டது.

