கோவை மாநகரில் புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திராவிட தமிழர் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனுவில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலையை கோவை மாநகரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்க வேண்டும் என அரசியல் இயக்கங்கள் சார்பில் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24.09.2007 அன்று நடைபெற்ற கோவை மாநகராட்சி கூட்டத்தில், மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்புள்ள போக்குவரத்து தீவுகளில் ஏதேனும் ஒன்றில் அம்பேத்கர் சிலை அமைக்க மாநகராட்சிக்கு ஆட்சேபணை இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான தீர்மான எண் 132 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு நிர்வாகத் துறைகளிடம் இருந்து அனுமதி கிடைத்த பின்னரும், சட்டம்–ஒழுங்கு காரணங்களை முன்வைத்து கோவை மாநகர காவல்துறை தொடர்ந்து அனுமதி மறுத்து வருவதாக திராவிட தமிழர் கட்சி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
19 ஆண்டுகளாக அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கிடைக்காதது வேதனைக்குரியது என தெரிவித்துள்ள அந்த அமைப்பு, கோவை மாநகரில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பொருத்தமான ஏதேனும் ஒரு இடத்தில் அம்பேத்கர் சிலை அமைக்க காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாநகரில் பொது இடத்தில் அம்பேத்கர் சிலை அமைப்பது தொடர்பான கோரிக்கை நீண்டகாலமாக பல்வேறு அமைப்புகளால் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பாக கடந்த காலங்களில் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

