வருசநாடு, மேகமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தியும் தேனி பங்களாமேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆண்டிப்பட்டி திமுக எம்.எல்.ஏ. மகாராஜன், “என் உயிர் போனால் தான் இந்த மக்களை வெளியேற்ற முடியும்; மக்களை வெளியேற்ற துப்பாக்கிச் சூடு நடத்தினால் முதலில் என் நெஞ்சில்தான் குண்டு பாயும்” என்று ஆவேசமாக பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வன ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் வருசநாடு, மேகமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மலை கிராம மக்களின் வெளியேற்ற நடவடிக்கையை நிறுத்த வேண்டும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் தேசம் கட்சி சார்பில் தேனி பங்களாமேடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மலைப்பகுதி மக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் கலந்து கொண்டு பேசிய ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. மகாராஜன், “கடந்த ஆண்டு வரை வனத்துறையினரால் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், “வனத்துறைக்கு சொந்தமான இடம் என்றால் அதை நாங்கள் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால் அதனை முறையாக முழுமையாக அளவீடு செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு மக்களை வெளியேறச் சொன்னால் அவர்கள் எங்கே செல்வார்கள்?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “வனத்துறைக்கு சொந்தமான இடத்திற்கும் மக்கள் வசிக்கும் இடத்திற்கும் இடையே 10 கிலோமீட்டர் தூரம் உள்ளது. அங்கு புலியும் இல்லை, எலியும் இல்லை, புளியமரமும் இல்லை” எனக் கூறி, மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
“விவசாயிகள் போராடுகிறார்கள் என்பதால் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் எங்களுடைய போராட்டம் அரசின் கண்ணுக்குத் தெரியவில்லையா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், “என் உயிர் போனால் தான் இந்த மக்களை வெளியேற்ற முடியும். மக்களை வெளியேற்ற துப்பாக்கிச் சூடு நடத்தினால் முதலில் என் நெஞ்சில்தான் குண்டு பாயும்” என்று மகாராஜன் ஆவேசமாக பேசினார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராகவும், மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராகவும் பொதுமக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையே, ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக, வருசநாடு மற்றும் மேகமலை பகுதிகளில் வசிக்கும் அனைத்து கிராம மக்களும் உடனடியாக வெளியேற்றப்பட உள்ளதாக பரவும் தகவல்களில் உண்மை இல்லை என வனத்துறை சமீபத்தில் விளக்கம் அளித்திருந்தது.

