விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 277 பயனாளிகளுக்கு ரூ.24.65 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வழங்கினார்.
நாரணாபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் சுகாதாரம், வேளாண்மை, சமூக நலத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசு திட்டங்கள் தொடர்பான அரங்குகளை அமைச்சர் கீர்த்தனா மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி ஆகியோர் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 277 பயனாளிகளுக்கு ரூ.24.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீர்த்தனா வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, மக்கள் தொடர்பு முகாம்களை தொடர்ந்து நடத்துவதன் மூலம் பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வாரந்தோறும் மக்கள் தொடர்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களை நன்றாகப் படிக்க வைத்து, அவர்கள் விரும்பும் துறையில் சிறந்து விளங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் முதல்வர் விஜய் மேற்கொள்வார்” என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதே அரசின் முதன்மை நோக்கம் என்றும், அந்தப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை இரண்டு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காக மேலும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் கூறினார்.
பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் கீர்த்தனா, “பெண்கள் அனைவரும் சிங்கப்பெண்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே எனக்கு தொழில் துறையை முதல்வர் விஜய் வழங்கியுள்ளார்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியமானது என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

