தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, புதிய சட்டமன்ற கட்டடம் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், நூற்றாண்டு பழமையான தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றையும், அங்கு நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ள சமூகநீதிச் சட்டங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு உள்ளாட்சியில் 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பெண்களுக்கு சொத்தில் உரிமை வழங்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் அப்பாவு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் அரசு பணியில் உள்ள பெண்களின் முதல் இரண்டு பிரசவங்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஓராண்டு விடுப்பு, பள்ளி மாணவர்களுக்கான ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தற்போதைய சட்டமன்ற கட்டடம் முதல்-அமைச்சர் விஜய்க்கு பிடிக்கவில்லையா அல்லது சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் திருவுருவப் படங்களை பார்ப்பது பிடிக்கவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் படப்பிடிப்பு தளம் மற்றும் சொகுசு அறைகள் அமைப்பதாகக் குறிப்பிட்டு, அதற்காக மக்கள் வரிப்பணம் பயன்படுத்தப்படுவது குறித்தும் அப்பாவு தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, கடலை ஒட்டிய பகுதியில் புதிய சட்டமன்ற கட்டடம் அமைப்பது தொடர்பான பேச்சுகளை குறிப்பிட்டு, காலம் காலமாக கடலை நம்பி மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவர்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளையும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீனவர்களின் நிலத்தை பாதிக்கும் வகையில் புதிய சட்டமன்ற கட்டடம் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அது மீனவ மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா என்றும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்பாவுவின் இந்த சமூக வலைதளப் பதிவு, புதிய சட்டமன்ற கட்டடம் தொடர்பான விவாதத்தை அரசியல் ரீதியாக மீண்டும் எழுப்பியுள்ளது.

