தாணிப்பாறை அடிவாரத்தில் ஏமாற்றத்துடன் காத்திருக்கும் பொதுமக்கள்
விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்று வரும் நிலையில், மலைப் பகுதியில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதால் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சதுரகிரி மலைப் பகுதியில் திடீரெனக் காட்டுத்தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு, பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு மலையேற இன்று தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆகியோர் கூட்டாக உத்தரவிட்டுள்ளனர்.
இருப்பினும், இந்தத் தடை உத்தரவு அறியாமல் இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் குவிந்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, காவல்துறையினர் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நிலைமையை எடுத்துரைத்துப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் மலையேற இயலாத பக்தர்கள், தாணிப்பாறை அடிவாரப் பகுதியிலேயே சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.
நாளை மிகவும் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினத்திற்குள் காட்டுத்தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே நாளை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற சூழல் நிலவுவதால், பக்தர்கள் பெரும் குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.

