திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, இந்திரா கணேசன் பிசியோதெரபி கல்லூரி ஆகியவை, திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன் லயன்ஸ் கிளப், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் கிளப் மற்றும் திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ் கிளப் ஆகியவற்றுடன் இணைந்து இலவச சித்த மருத்துவ முகாமை நடத்தின.
திருச்சி மேக்குடி சாய்பாபா கோயில் அருகே நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முகாமில் லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன செயலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார், சங்க நிர்வாக அலுவலர் ஹரி பிரசாத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்திரா கணேசன் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சித்த மருத்துவர் லதா, சித்த மருத்துவத்தின் அடிப்படைகள் குறித்து பேசினார். நாம் உண்ணும் உணவு உடல்நலத்துடன் தொடர்புடையது என்றும், உடலுக்குப் பொருந்தாத வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவுப் பழக்கங்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமாக அமையலாம் என்றும் தெரிவித்தார்.
சித்த மருத்துவத்தில் உடலின் வளி, அழல், ஐயம் ஆகிய மூன்றும் சமநிலையில் இருப்பது முக்கியம் என்றும், அவற்றில் ஏற்படும் சமநிலையின்மை நோய் நிலைகளுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது என்றும் அவர் விளக்கினார். இதற்கேற்ப சித்த மருத்துவத்தில் சிகிச்சை முறைகள் வழங்கப்படுவதாகவும் கூறினார்.
முகாமில் சித்த மருத்துவர்கள் நீலகண்டன், ஸ்ரீநிதி, வர்மா செல்வகுமார் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் பொது மருத்துவ ஆலோசனை, ரத்த அழுத்தப் பரிசோதனை, ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை, பிசியோதெரபி ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன. மருத்துவர்களின் ஆலோசனைக்கேற்ப தேவையானவர்களுக்கு இலவசமாக சித்த மருந்துகளும் வழங்கப்பட்டன.

