ஜார்க்கண்டில் அரசு ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், சட்டசபையை நோக்கி பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தடுப்புகளை மீறி முன்னேற முயன்ற மாணவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஜார்க்கண்ட் பொது பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் நடத்திய பல்வேறு ஆட்சேர்ப்பு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சர்ச்சைக்குரிய தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும், ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்த போராட்டம் 17-வது நாளை எட்டிய நிலையில், மாணவர்கள் மற்றும் மாநில அரசுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, இன்று சட்டசபையை முற்றுகையிடும் நோக்கில் மாணவர்கள் பேரணி நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக ராஞ்சியில் உள்ள ஒரு மைதானத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரெயில், பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் மாணவர்கள் ராஞ்சிக்கு வந்தனர்.
மாணவர்களின் பேரணியை தடுக்க போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்புகளை அமைத்திருந்தனர். சட்டசபையை நோக்கி மாணவர்கள் முன்னேறியபோது சிலர் தடுப்புகளை கடந்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்ததுடன், தடியடியும் நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
மாணவர்களின் பேரணியை முன்னிட்டு ராஞ்சி நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சட்டசபையை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், போராட்டத்தை முன்னிட்டு ராஞ்சியில் பெரும்பாலான பள்ளிகளும் மூடப்பட்டன.
இதனிடையே, மாணவர்களின் கோரிக்கைகளில் 98 சதவீதத்தை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் இதனை ஏற்கவில்லை. தாங்கள் ரத்து செய்யக் கோரிய 13 தேர்வுகளில் 3 தேர்வுகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் அரசுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது.

