நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூலக்கரைப்பட்டியில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
விழாவில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்ற 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வளையல் அணிவிக்கப்பட்டது. மேலும், புடவை, பழங்கள், பூக்கள் மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்கள் உள்ளிட்டவை அடங்கிய சீர்வரிசைத் தட்டுகளை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் வழங்கி, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன், மாவட்ட சமூக நல அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

