நெல்லை மாநகரப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் மினி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஷேர் ஆட்டோ சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநகரப் பகுதிகளில் இயக்கப்படும் சில மினி பேருந்துகள் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக ஷேர் ஆட்டோ சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.
குறிப்பாக, நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களை மாற்றி மினி பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இதுவரை அதிகாரப்பூர்வ கால அட்டவணை வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், விதிமுறைகளை மீறி புதிய பேருந்து நிலையத்திற்குள் மினி பேருந்துகளை இயக்கி பயணிகளை ஏற்றி, இறக்குவதாகவும் குற்றம்சாட்டினர்.
இதுபோன்ற விதிமுறை மீறல்கள் தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, அதிகாரிகளின் நடவடிக்கையின்மையையும் கண்டித்து போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஷேர் ஆட்டோ தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும், தங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், வரும் திங்கட்கிழமை முதல் மினி பேருந்துகளைப் போல தாங்களும் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றிச் செல்லும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஷேர் ஆட்டோ சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அரசு பேருந்துகளின் சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவோம் என்றும், தேவையானால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

