விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியின் வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த கட்டிடத்தில் வகுப்புகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கலையரங்கில் நடைபெறும் வகுப்புகள்
வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பள்ளியில் உள்ள கலையரங்கம் தற்காலிகமாக வகுப்பறையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கலையரங்கில் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு தேவையான கற்றல் சூழல் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை
சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பழுதடைந்த கட்டிடத்திற்கு பதிலாக புதிய வகுப்பறை கட்டிடம் அமைத்து, மாணவர்களுக்கு போதிய வகுப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

