திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் காணாமல் போன வழக்கில், அவரது கணவர் மீது சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பாப்பான்குளம் நவாஸ் குவாரியில் மனித எலும்புக்கூடு மற்றும் எலும்புத் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரைச் சேர்ந்த மகாராஜா என்பவர், கடந்த 2008ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அமராவதி (34) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், அமராவதி காணாமல் போனதாக அவரது தாயார் கடந்த 23ஆம் தேதி சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது மகாராஜா அளித்த தகவலின் அடிப்படையில், கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பான்குளம் பகுதியில் உள்ள நவாஸ் குவாரியில் போலீசார் தேடுதல் மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு சேலை, மனித மண்டை ஓடு, தொடை எலும்பு உள்ளிட்ட எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. சம்பவ இடத்தை தடய அறிவியல் துறை அலுவலர் ஆனந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். முதற்கட்ட விசாரணையில், மகாராஜா கடந்த 2024ஆம் ஆண்டு அகிலா (23) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், இதன் காரணமாக அமராவதிக்கும் மகாராஜாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட தகராறின்போது, மகாராஜா அமராவதியை இருசக்கர வாகனத்தில் பாப்பான்குளம் நவாஸ் குவாரிக்கு அழைத்துச் சென்று தாக்கி குவாரிக்குள் தள்ளியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடு மற்றும் எலும்புத் துண்டுகள் அமராவதியுடையதா என்பது குறித்து தடய அறிவியல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதன் முடிவுகளின் அடிப்படையில் மகராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகள்
குவாரியில் மனித எலும்புக்கூடு மீட்பு – காணாமல் போன பெண்ணின் கணவரிடம் தீவிர விசாரணை
🕒 25 செப்., 2026, 12:26 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •நெல்லை அருகே குவாரியில் மனித எலும்புக்கூடு மீட்பு – காணாமல் போன பெண்ணின் கணவரிடம் தீவிர விசாரணை
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
