விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், நியாயவிலைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆய்வு நடைபெற்றது.
600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயிலும் இந்தப் பள்ளியில், பழைய கட்டிடங்களை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான சாவியும் துணை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடங்களை எம்.எல்.ஏ. கார்த்திக் நேரில் பார்வையிட்டார்.
அப்போது சில கட்டிடப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என்றும், கழிவறை மற்றும் கழிவறை கதவுகள் உள்ளிட்ட பணிகளிலும் குறைகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை அழைத்து பணிகளை முறையாகவும் முழுமையாகவும் முடிக்க வேண்டும் என எச்சரித்தார். பணிகள் தொடர்பாக பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரர் அளித்த பதில்களில் முரண்பாடு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பள்ளி கட்டிடங்களை சீரமைக்க சுமார் ரூ.14 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பணிகளை முழுமையாக நிறைவு செய்த பின்னரே அதற்கான தொகையை வழங்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. கார்த்திக் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பள்ளியின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

