சிறுபான்மையினருக்கான கல்வி மற்றும் தொழில் கடன் திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக (TAMCO) தலைவர் தமீம் அன்சாரி சாகிப் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான கடன் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தமீம் அன்சாரி சாகிப், சிறுபான்மை மாணவர்களுக்கு உயர் கல்விக்கான கல்விக் கடன் ஆணைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுபான்மையினருக்கான கல்விக் கடன் மற்றும் சிறு, குறு தொழில்களுக்கான கடன் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் பீடி தொழிலில் ஈடுபடுவோர் அதிகம் உள்ள நிலையில், அவர்களின் பொருளாதார மேம்பாட்டை கருத்தில் கொண்டு தனிநபர் கடன் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் அதிகமானோர் பயன்பெறச் செய்வதே நோக்கம் என்றும் கூறினார்.
வெளிநாட்டு கல்விக்கு ரூ.36 லட்சம் வரை கடன்
சிறுபான்மையின மாணவர்கள் உள்நாட்டில் உயர்கல்வி பயில கல்விக் கடன் வழங்கப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டில் உயர்கல்வி பயில ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வீதம் மொத்தம் ரூ.36 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்வியை நிறைவு செய்த பின்னர் அல்லது வேலைவாய்ப்பு கிடைத்த பின்னர் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் வாய்ப்புகள் உள்ளதாகவும் தமீம் அன்சாரி சாகிப் கூறினார்.
நெல்லைக்கு ரூ.3 கோடி கடன் இலக்கு
சிறுபான்மையினருக்கான தொழில் கடன் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.100 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகை மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், கடன் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விரைவில் எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு சிறுபான்மையினருக்காக ரூ.29 கோடி மட்டுமே கடன் வழங்கப்பட்ட நிலையில், தற்போதைய அரசு பொறுப்பேற்று நான்கு மாதங்கள் நிறைவடைந்து ஐந்தாவது மாதம் தொடங்கியுள்ள நிலையில், இதுவரை ரூ.20 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மீதமுள்ள இலக்கையும் நிறைவேற்றி, தேவைப்பட்டால் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளிடம் இருந்து கூடுதல் நிதியைப் பெற்று சிறுபான்மையின மக்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமீம் அன்சாரி சாகிப் கூறினார்.
கடன் இலக்கை ரூ.300 கோடியாக உயர்த்த திட்டம்
மகாராஷ்டிராவில் சிறுபான்மையினருக்கு ரூ.600 கோடிக்கும் அதிகமாகவும், கேரளாவில் ரூ.275 கோடிக்கும் அதிகமாகவும் கடன் வழங்கப்பட்டு வருவதாக தமீம் அன்சாரி சாகிப் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போதுள்ள ரூ.100 கோடி கடன் இலக்கை நிறைவு செய்த பின்னர், மாநில அளவிலான இலக்கை ரூ.300 கோடி வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

