ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பக (SMTR) எல்லைக்குட்பட்ட மலைக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வன விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 4 நாட்கள் தொடர் காத்திருப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
SMTR எல்லைக்குட்பட்ட 9 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த வன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாட்கள் தொடர் போராட்டம்
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும், வனத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் வெளியேற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடமலைக்குண்டு புதிய பேருந்து நிலையம் முன்பு செப்டம்பர் 26 முதல் 29-ஆம் தேதி வரை 4 நாட்கள் இரவு பகலாக தொடர் காத்திருப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கலெக்டர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதனிடையே, போராட்டத்தை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலில் உள்ள இரு கேட்டுகளும் பூட்டப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகத்திற்கு வரும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் முறையாக சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
மலைக்கிராம மக்களின் போராட்டத்தை முன்னிட்டு தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

